தமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்!

Share

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளது. உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு பதிலாக வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க நேரிடும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்

இதுகுறித்து தனது அறிக்கையில் அவர்;

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5-ஆம் நாளான இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ள சுற்றுச்சூழலை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு பதிலாக வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க நேரிடும்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’ (Ecosystem Restoration) என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ளது. இந்த முழக்கமும், அதன் நோக்கமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இயற்கைக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. புவிவெப்பமடைதலால் உருவாகியுள்ள காலநிலை அவசரநிலை; இயற்கைவள அழிவினால் உருவாகியுள்ள உயிர்ச்சூழல் அவசரநிலை; அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியன உடனடியாக போக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் தடுத்து ஒரு உன்னதமான எதிர்காலத்தை அடுத்த பத்தாண்டுகளுக்குள் உருவாக்குவது சாத்தியம் தான். அதற்கான ஆற்றலும் அறிவு வளமும் இன்றைய உலகில் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து மட்டத்திலும் தீவிரமாக செயல்படுவது தான் பூவுலகைக் காப்பதற்கான உடனடி தேவையாகும்.

சூழல் மண்டலங்கள் உயிர்வாழ்வின் ஆதாரம். சூழல் மண்டலங்கள் நலமாக இருந்தால் பூவுலகும் அதன் மக்களும் நலமாக வாழ்வர். எனவே சூழல் மண்டலங்களின் மறு உருவாக்கத்திற்கான பத்தாண்டுகள் (UN Decade on Ecosystem Restoration 2021 – 2030) எனும் பிரச்சாரத்தை இந்த நாளில் ஐ.நா. தொடங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டும் போதாது… அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது இப்பரப்புரையின் நோக்கம்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல், உயிரி பன்மய வளத்தை பாதுகாத்தல், மனித உடல்நலத்தை காப்பாற்றுதல் ஆகிய அனைத்திற்கும் சூழல் மண்டலங்களை மறு உருவாக்குவது இன்றியமையாத தேவையாகும். காடுகளையும், உயிரிப்பன்மய வளத்தையும் சீரழித்ததன் விளைவாகவே கோரோனா பெருந்தொற்று உருவானது என்பதை கவனத்தில் கொண்டால் சூழல் மண்டலங்களின் முக்கியத்துவம் புரியும்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக கரியமில வாயு அளவை 2030ஆம் ஆண்டுக்குள் பாதியளவாக குறைப்பதற்கு பாரிஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஐநா நீடித்திருக்கும் வளர்ச்சி இலக்குகளின் கீழ் 17 குறிக்கோள்களை 2030-க்குள் எட்ட உலக நாடுகள் உறுதி ஏற்றுள்ளன. ‘சூழல்மண்டல மறுஉருவாக்கம்’ இந்த இலக்குகளை அடைவதற்கான சிறந்த வழியாகும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள், அவ்விடத்தில் உள்ள உயிரற்ற பொருட்களுடன் ஒன்றுக்கொன்று இயற்கையாகவே தொடர்பு கொண்டு இருப்பதை சூழல் மண்டலம் என்கிறோம். இது இயற்கை அமைப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. ஒரு பெரிய காடும் சூழல் மண்டலம் தான். ஒரு சிறிய குளமும் சூழல் மண்டலம் தான். மனித வாழ்க்கைக்கு தேவையான நீர், உணவு உள்ளிட்ட அனைத்தையும் இவையே தருகின்றன.

ஐக்கிய நாடுகள் அவையானது சூழல் மண்டலங்களை விலைநிலங்கள், காடுகள், ஏரிகளும் ஆறுகளும், புல்வெளிகள், மலைகள், கடல்களும் கடலோரப்பகுதிகளும், கரிநிலங்கள், நகரப்பகுதிகள் என எட்டு வகையாக வகைப்படுத்தியுள்ளது. ‘‘அனைத்து சூழல் மண்டலங்களும் மனித செயல்களால் மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகில் 42 கோடி எக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் 175 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மொத்த விளைநிலங்களில் 20% உற்பத்தி திறனை இழந்துள்ளது. இதனால் 12% உணவு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. 66% கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்றில் ஒரு பங்கு மீன்வளம் பாதிப்பை சந்தித்துள்ளது. 2000-ஆவது ஆண்டுக்கு பின் நகர மக்களில் 50% பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை’’- என்கிறது சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு ஐநா வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை.

சூழல் மண்டல மறுசீரமைப்பு மாபெரும் பலன்களை அளிக்கக் கூடியது ஆகும். வேளாண் காடுகளை மறு உருவாக்குவதன் மூலம் 130 கோடி பேருக்கான உணவு உத்திரவாதத்தை உறுதி செய்ய முடியும். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டிய கரியமில வாயு அளவில் மூன்றில் ஒரு பங்கு குறைப்பை சாதிக்க முடியும். உலகெங்கும் அழிந்துவரும் உயிரின வகைகளில் 60 விழுக்காட்டினை அழியாமல் காப்பாற்ற முடியும்.

இவையெல்லாம சூழல் மண்டலங்களை மறு உருவாக்குவதன் மூலம் மனிதகுலத்திற்கு கிடைக்கக் கூடிய மாபெரும் பலன்களில் ஒரு சில ஆகும்.

‘சூழல்மண்டல மறு உருவாக்கம்’ எனும் இலக்கினை தமிழ்நாடில் முதன்மை நோக்கமாக செயல்படுத்த வேண்டும். விழிப்புணர்வை உருவாக்குதல், தமிழ்நாட்டின் அனைத்து வகை சூழல் மண்டலங்களையும் பாதுகாத்தல், சீரழிந்த நிலையில் உள்ளவற்றை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளை தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் நீர்வள மாசுபாட்டினையும் அழிவினையும் தடுத்து அவற்றை மறு உருவாக்கம் செய்ய வேண்டும். தமிழக நகரப்பகுதிகளை பசுமை நகரங்களாக மாற்ற வேண்டும். கடலோரப்பகுதிகளை மீளமைக்க வேண்டும். விளைநிலங்கள் அழிவை தடுத்து சீர் செய்ய வேண்டும். காடுகளை காப்பாற்றி பசுமைப் பகுதிகளை அதிகமாக்க வேண்டும். இவ்வாறாக அனைத்து சூழல் மண்டலங்களையும் மறுசீரமைக்க இந்த சுற்றுச்சூழல் நாளில் நாம் உறுதியேற்போம் என கேட்டு கொண்டுள்ளார்.


Share

Related posts

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்

Admin

தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Udhaya Baskar

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

Leave a Comment