மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Share

“பிரதமர் பதவிக்குப் பொருந்தாத வகையில் தரம்தாழ்ந்து, தி.மு.க. மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்களே, உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

30-03-2021 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, ஆலங்குடியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

முதலில் நீங்கள் எல்லாம் தந்திருக்கும் இந்தச் சிறப்பான உற்சாகமான இனியதொரு வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி, நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்.

ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நம் கழக வேட்பாளர் – அருமைச் சகோதரி டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும். அவர் ஏற்கனவே இந்தத் தொகுதியில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து, கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்குத் துணை நின்று பணியாற்றியவர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவரைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மறைந்த நம்முடைய ஆலடி அருணா அவர்களுடைய அருமை மகள். எனவே நம்முடைய கழக வேட்பாளர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

அதேபோல சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ராஜா அவர்கள், 35 வயது இளைஞராக இருக்கும் வழக்கறிஞர். அவர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல, இந்தத் தொகுதிக்காக வாதாடுபவர் – போராடுபவர். எனவே அப்படிப்பட்ட ஒரு சிறந்த வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுத்து சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம். அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர், டாக்டர் சதன் திருமலைக்குமார் அவர்கள், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து வாசுதேவநல்லூர் தொகுதிக்காக சட்டமன்றத்தில் பேசி வந்திருப்பவர். மருத்துவச் சேவை ஆற்றிக் கொண்டிருப்பவர். எனவே வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சதன் திருமலைக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அதேபோல தென்காசி தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் எஸ்.பழனி அவர்கள், காங்கிரஸ் கட்சியில் மாவட்டத் தலைவராக இருந்து அந்தக் கட்சிக்கும், அதேபோல தென்காசி தொகுதி மக்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டிருப்பவர். பேரூராட்சித் தலைவராக இருந்து பணியாற்றி இருப்பவர். எனவே தென்காசி சட்டமன்ற தொகுதியில் பழனி அவர்களை கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

அதேபோல கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகமது அபூபக்கர் அவர்கள், அந்த கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். ஏற்கனவே கடையநல்லூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்துச் சமுதாய மக்களின் அன்பைப் பெற்றவராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவரை ஏணி சின்னத்தில் ஆதரித்து, நீங்கள் சிறப்பான வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

இங்கு எனக்கு அருகில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலை கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, “தமிழர்களுக்கு கண் கொடுத்தவர் காமராஜர். கருணாநிதிதான் அவர்களை எழுந்து நடக்க வைத்தார்” என்று சொன்னார். அதேபோல ஐந்து முறை தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய நேரத்தில் சாமானியர்களுக்கான ஆட்சியாக, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் ஆட்சியாக நடத்திக் காட்டினார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் நட்பு என்பது, தந்தை – மகன் உறவைப் போன்றது என்பதை எல்லோரும் நன்றாக அறிவார்கள். நெருக்கடிக் காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் உடல் நலிவுற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, தலைவர் கலைஞர் அவர்கள் அவர்கள், வீடு தேடிச் சென்று “இந்தியாவில் நெருக்கடிநிலை அமல் படுத்தப்பட்டிருக்கிறது. நான் இன்றைக்கு முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறேன். எனவே நான் அதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எனவே எனது ஆட்சியைக் கலைத்து விடலாமா?” என்ற ஒரு யோசனையை அவரிடம் கேட்டு இருக்கிறார்.

உடனே பெருந்தலைவர் காமராஜர், கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டு, “இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றை தமிழ்நாட்டில்தான் இப்போது சுவாசிக்க முடிகிறது. நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆட்சியைக் கலைக்கக் கூடாது” என்று திட்டவட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். இது ஒரு வரலாறு.

அதேபோல, என்னுடைய திருமணத்திற்கு நேரடியாக வந்து என்னை வாழ்த்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். அப்போது எப்படிப்பட்ட சூழ்நிலை என்றால், என்னுடைய திருமணத்திற்கு நேரடியாக தலைவர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரிடத்தில் பத்திரிகை கொடுத்திருக்கிறார். அப்போதும் அவர் உடல்நலம் முடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அப்போது பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, “நீங்கள் வரவேண்டாம். திருமணம் முடிந்தவுடன் நானே அவர்களை அழைத்து வருகிறேன். நீங்கள் மணமக்களை வாழ்த்துங்கள்” என்று கலைஞர் சொல்லியிருக்கிறார்.

அப்போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், “இல்லை… இல்லை… நான் கட்டாயம் வர ஆசைப்படுகிறேன். உங்கள் பையன் இந்தச் சின்ன வயதிலேயே அரசியலில் ஈடுபட்டு அவன் செய்து கொண்டிருக்கும் செயல்களைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் பத்திரிகைகளில் தொடர்ந்து பார்க்கிறேன். எனவே அப்படிப்பட்டவரை நான் நேரடியாக வந்து வாழ்த்த வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை. அந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள், “நீங்கள் வருவதாக இருந்தால் சொல்லுங்கள், நான் திருமண மண்டபத்தை மாற்றுகிறேன். உங்கள் கார், நேரடியாக மேடைக்கு வந்து அதிலிருந்து நீங்கள் இறங்கி வந்து வாழ்த்தலாம். படி ஏறி வர வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்தை மாற்றி, அந்த மேடையை கார் வருவதற்கு வசதியாக அமைத்து, அந்தக் காரிலேயே மேடைக்கு வந்து அதற்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் என்னை மேடையில் உட்கார்ந்து வாழ்த்தி விட்டுச் சென்றார். இது வரலாறு.

அதுமட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்த போது, அவரை எங்கு அடக்கம் செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர்.

அவர், காந்தி மண்டபத்திற்கு அருகில்தான் பெருந்தலைவரின் உடலை அடக்கம் செய்து கல்லறை அமைத்து நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, கொட்டும் மழையிலும் தலைவர் கலைஞர் அவர்கள் நேரடியாக, இரவு நேரம் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விளக்குகள் இல்லாத நேரத்தில் கார் லைட் வெளிச்சத்தில் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றைக்கு அது நினைவு மண்டபமாக மாறி இருக்கிறது. அதற்குக் காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

அரசியலில் மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் எத்தனையோ உண்டு. இருந்தாலும், அவர் தமிழர் தலைவர், கர்மவீரர் காமராஜராக விளங்கிய காரணத்தினால், தலைவர் கலைஞர் அவர்கள் அவருக்கு எந்த விதத்தில் மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைத் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சென்னை மாநகராட்சியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு முதன்முதலில் சிலை அமைத்தது தி.மு.க. மாநகராட்சியாக இருந்தபோதுதான். ஆசியாவிலேயே – சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரைதான் பெரிது என்று சொல்லுவோம். அந்த கடற்கரை சாலைக்கு ‘காமராஜர்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு குமரியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் இருக்கிறது. அது கடலை ஒட்டி இருக்கின்ற காரணத்தினால், அங்கு மணிமண்டபம் அமைக்கக் கூடாது என்று அப்போது பெரிய எதிர்ப்பு வந்தது. அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. ஆனால் கலைஞர் அவர்கள் விடாப்பிடியாக மத்திய அரசிடம் போராடி, வாதாடி – அதற்குச் சிறப்பு அனுமதி பெற்று, குமரியில் காமராஜருடைய மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதற்கும் காரணம் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

அதேபோல், நெல்லையில் பெருந்தலைவர் காமராஜருக்குப் பெரிய சிலை, காமராஜருடைய செயலாளராக இருந்த வைரவனுக்கு வேலை வழங்கி, அவருக்கு அரசு வீட்டை ஒதுக்கித் தந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு ‘காமராஜர்’ பெயரைச் சூட்டி மகிழ்ந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

அதுமட்டுமல்ல காமராஜருடைய பிறந்தநாளான ஜூலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கொண்டாட சட்டம் போட்டவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். இவ்வாறு நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு பெருமைகளைத் தேடித் தந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வந்து விட்டுச் சென்றிருக்கிறார். வழக்கம்போல பேச வேண்டியவற்றைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். வழக்கம் போல் என்ன பேசுவார்? பொய் பேசுவார். அவ்வாறு பேசிவிட்டு, மோடி மஸ்தான் வேலைகள் செய்வார் அல்லவா, அதைப் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.

இப்போது சொல்கிறேன், நீங்கள் என்ன பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இந்தத் தமிழ்நாட்டில் எடுபடாது.

பிரதமர் மோடி அவர்களே…! இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் என்ன ஆனது? உங்களால் ஒரு சீட்டாவது தமிழ்நாட்டில் வர முடிந்ததா? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால், இப்போது அம்மையார் ஜெயலலிதா அவர்களைப் பற்றிப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். இப்போது ஜெயலலிதாவைப் பற்றி பேசுகிறீர்களே…மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே…

2014 மற்றும் 2016-இல் அந்த ஜெயலலிதாவைப் பற்றி என்னவெல்லாம் பேசினீர்கள். அதற்கு அந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களே பதில் சொன்னார்களே. “மோடியா? இந்த லேடியா? பார்த்து விடுவோம் !” என்று சொன்னார்கள்.

அப்போது ஊழல் பெருச்சாளி, லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி. இந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை அரசியலில் இருந்தே ஒழிக்க வேண்டும் என்று பேசினீர்கள். இன்றைக்கு நீங்கள் ஒரு பிரதமர் என்பதை மறந்து அபாண்டமான குற்றச்சாட்டை தாராபுரத்தில் உங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறீர்கள். என்ன பேசி இருக்கிறீர்கள்?

1989-இல் மார்ச் 25ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதாவை தி.மு.க.காரர்கள் – தி.மு.க. ஆட்சி அவமானப்படுத்தியது என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். எனவே ஒரு கலவரத்தை நடத்தி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் செய்துவிட்டால், அதற்குப் பிறகு பணம் ஒதுக்க முடியாது. ஆட்சி இருக்க வேண்டும். எனவே அந்தத் தேதிக்குள் தி.மு.க. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாக வேண்டும்.

அந்த நிலையில், ஒரு கலவரத்தை நடத்த தி.மு.க. முயற்சிக்குமா? ஒரு கலவரத்தை நடத்தி ஜெயலலிதாவை அவமானப்படுத்தினோம் என்று ஒரு அபாண்டமான பொய்யை பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். அன்றைக்கு என்ன நடந்தது? என்று மக்களுக்குத் தெரியும்.

இன்னும் சொல்கிறேன், பிரதமர் மோடி அவர்களே…! அன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு அருகில் இருந்தது, இன்றைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் உள்ள திருநாவுக்கரசர் அவர்கள். அவர் அப்போது அ.தி.மு.க.வில் இருந்தார்.

அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி வந்ததற்குப் பிறகு, சட்டமன்றத்தில் அன்றைக்கு என்ன நடந்தது என்பதைப் புள்ளிவிவரத்தோடு, ஆதாரத்தோடு பேசியிருக்கிறார். “அது ஒரு நாடகம். வேண்டும் என்றே பட்ஜெட் படிக்கின்ற போது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். அதற்கு நானும் உடந்தையாக இருந்தேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்” என்று அவர் பேசிய பேச்சை இன்றைக்கும் அவைக்குறிப்பில் பார்த்தால் தெரியும்.

மோடி அவர்களே…! தயவு செய்து நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் பிரதமர், நான் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சாதாரண எதிர்க்கட்சித் தலைவர். உங்களுக்கு வேண்டும் என்றால் சொல்லுங்கள், நாளைக்கே திருநாவுக்கரசர் பேசிய பேச்சை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதைப் படித்துவிட்டு அதற்குப் பிறகு நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் யாரோ சொன்னார்கள் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பிரதமர் பேசிவிடலாமா?

நான் இன்னும் கேட்கிறேன். உங்கள் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கு நீதிமன்றத்தில் என்ன நடந்தது. அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அ.தி.மு.க.வின் மகளிர் அணியை அழைத்து ஒரு பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அதை சொல்வதற்கு என் நா கூசுகிறது. பத்திரிகைகளில் வந்த செய்தி இருக்கிறது. போட்டோ இருக்கிறது. வேண்டும் என்றால் சொல்லுங்கள்.

ஏதோ தி.மு.க., பெண்களைக் கேவலப்படுத்தி விட்டதைப் போல, ஜெயலலிதாவைக் கேவலப்படுத்திவிட்டதைப் போல ஒரு பொய்யை, தாராபுரம் மேடையில் பிரதமர் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி அவர்களைக் கேளுங்கள், என்ன நடந்தது என்று தெரியும். ஒரு ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சந்திரலேகா அவர்களுக்கு முகத்தில் திராவகத்தை ஊற்றி அவருடைய முகம் இன்றைக்கும் சின்னாபின்னமாக இருக்கும் காட்சியைப் பார்க்கலாம். அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இவ்வாறு பொய் பேசுவதற்கு நா கூச வேண்டாமா? எனவே நான் மீண்டும் மீண்டும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்ள விரும்புவது, கொஞ்சம் யோசித்து, சிந்தித்துத் தெரிந்துகொண்டு, ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

அது மட்டுமல்ல, ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் பேசுகிறார். ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு அவர் பேசுகிறார். வலது கை பக்கம் ஒருவர், இடது கை பக்கம் ஒருவரைப் பிடித்துக் கொண்டு, “ஊழலை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

உங்களுடைய ஏஜெண்ட் என்று சொல்லப்படும் ஆளுநரைத் தமிழ்நாட்டில் நியமித்திருக்கிறீர்கள். அந்த ஆளுநரிடத்தில் கேளுங்கள். தி.மு.க.வின் சார்பில் முதலமைச்சரிலிருந்து கடைசியாக இருக்கும் அமைச்சர்கள் வரையில் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதைப் புள்ளி விவரத்தோடு ஆதாரத்தோடு புகார் மனுவாகத் தயாரித்து ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம். அதைக் கேட்டு வாங்கிப் பாருங்கள்.

சட்டம் – ஒழுங்கைக் காப்போம் என்று சொல்கிறீர்களே… இன்றைக்கு ரவுடிகளை, கேடிகளை எல்லாம் பா.ஜ.க.வில் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் லட்சணமா? நீங்கள் பிரதமராக வருவதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு என்னென்ன உறுதி மொழிகளைக் கொடுத்தீர்கள்? ஆண்டுக்கு, இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னீர்கள். கொடுத்து விட்டீர்களா?

வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள். கொடுத்து விட்டீர்களா? அவ்வாறு கொடுப்பதற்கு வக்கில்லை வகையில்லை, ஆனால் ஊழலை ஒழிப்போம் என்று மோடி பேசுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்.

1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது. எல்லோரும் சென்று வங்கியில் போடுங்கள் என்று உத்தரவிட்டீகளே… மக்களிடமிருந்து பணத்தைப் பறித்தீர்களே தவிர, பணத்தைக் கொடுத்து விட்டீர்களா?

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று சொன்னீர்கள். அது என்ன ஆனது? இன்றைக்கு 125 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொட்டும் மழையில், கொட்டும் பனியில், கொளுத்தும் வெயிலில் குடும்பம் குடும்பமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஒரு நாளாவது பேசும், ஆற்றல், தெம்பு, திராணி இருக்கிறதா? ஏன் அவர் பேசவில்லை?

இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயிகள், அவர்கள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அப்படிப்பட்ட விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் ஆட்சிதான் மத்தியில் இருக்கும் ஆட்சி. அதற்கு அடிமையாக இருக்கும் இந்த எடுபிடி ஆட்சி.

ஆனால் பழனிசாமி, நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி என்று சொல்கிறார். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் விவசாயியா? பச்சைத் துரோகி.

நீங்கள் எவ்வாறு முதலமைச்சராகப் பொறுப்புக்கு வந்தீர்கள்? அது மானக்கேடு. ஊர்ந்து சென்றீர்கள். தவழ்ந்து சென்றீர்கள் என்று சொன்னால் அவருக்குக் கோபம் வந்து விடும். நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு இருக்கும் விஷத்தை விட துரோகத்திற்கு விஷம் அதிகம். நீங்கள் அந்த துரோகத்தைச் செய்து முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறீர்கள்.

நீங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற விவசாயிகளைப் பார்த்து ‘தரகர்’ என்று சொல்கிறீர்களே… நியாயமா அது?

எனவே பிரதமர் மோடி அவர்களே… இப்போது வந்து சென்றிருக்கிறீர்கள். மறுபடியும் இரண்டாம் தேதி வருகிறீர்கள். நான் இப்போது கேட்ட கேள்விகளுக்கு தயவுசெய்து இரண்டாம் தேதியாவது பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் 6ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அதற்குப் பதில் சொல்வார்கள். அதுதான் உண்மை.

அதேபோல முதலமைச்சர் பழனிசாமி, எல்லாச் சமுதாயத்திற்கும் துரோகம் செய்திருக்கும் ஒரு முதலமைச்சராக இருக்கிறார்.

உதாரணமாக, இதே தென் மாவட்டத்திலிருக்கும் சீர்மரபு பழங்குடியினர் – டி.என்.டி. என அழைக்கப்பட்டார்கள். ஆனால் 1979ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களை டி.என்.சி. என்று மாற்றிவிட்டார்கள். அவ்வாறு மாற்றிய காரணத்தினால் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இது சமீபகாலமாக அவர்களிடத்தில் இருக்கும் கோரிக்கை. அதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வதைப் போல, அ.தி.மு.க. அரசு ஒரு கபட நாடகத்தை நடத்தியது.

அது என்னவென்றால், 26.08.2019 அன்று அ.தி.மு.க அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், தமிழக அரசில் டி.என்.சி. என்று இருப்பவர்களை மத்திய அரசின் உரிமைகளைப் பெறும்போது மட்டும் டி.என்.டி. என்று மாற்றி அழைக்கப்படுவார்கள் என்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. அரசு.

இது சீர்மரபு பழங்குடியினருக்கு இந்தப் பழனிசாமி அரசு செய்திருக்கும் பெரிய துரோகமாக அமைந்திருக்கிறது. அதனால் உறுதியோடு சொல்கிறேன், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை நிச்சயமாக ஒழிப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. சீர்மரபு பழங்குடியினர் என்று அவர்கள் அழைக்கப்படும் வகையில் ஒரே அரசாணை வெளியிடப்படும் என்கிற வாக்குறுதியை இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதே போல அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்க சீர்மரபினர் ஆணையமும் நிச்சயமாக அமைக்கப்படும். மேலும் சீர்மரபு பழங்குடியினர் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு எடுக்கும் உத்தரவை மத்திய அரசு கடந்த 18.08.2020 பிறப்பித்திருக்கிறது.

அதன்படி மாநில அரசு ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சி நியமித்து இருக்கிறதா? இல்லை. அவ்வாறு நியமிக்கின்றபோது அதனுடைய செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் பழனிசாமியின் அரசு அப்படி ஒரு தொடர்பு அதிகாரியை இதுவரையில் நியமிக்காமல் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் நான் உறுதியோடு சொல்கிறேன், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உடனே ஒரு தொடர்பு அதிகாரியை நாங்கள் உறுதியாக நியமிப்போம. எனவே பழனிசாமியின் இந்த அலட்சியமான செயல்பாட்டிற்குக் காரணம், பன்னீர்செல்வத்தின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி. எனவே இவர்களது நாற்காலிச் சண்டைக்காக ஒரு சமூகத்தின் உண்மையான கோரிக்கையைப் புறக்கணிக்கலாமா?

அவ்வாறு புறக்கணிக்கின்ற காரணத்தால் மக்கள் உங்களை நிச்சயமாகப் புறக்கணிக்கப் போகிறார்கள். அதுதான் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் – டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான 505 வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த 5 தொகுதிகளுக்காக, ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் மையம்; விளையாட்டு மைதானம். கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி. கடையம் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதற்காக கடனாநதி – ராமநதி இணைக்கப்படும். தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம். தென்காசியில் மருத்துவக் கல்லூரி; அரசு சட்டக் கல்லூரி; குளிர்பதனக் கிடங்கு; மாம்பழச் சாறு தயாரிப்புத் தொழிற்சாலை; கொப்பரைத் தேங்காய்களைக் காய வைப்பதற்காக மின் உலர் சாதன வசதி. தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டுத் தரம் உயர்த்தப்படும். சங்கரன்கோயிலில் ஜவுளிப்பூங்கா. தென்காசியில் பீடித் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தருவதற்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை. அடவிநயினார் அணையிலிருந்து உபரிநீர் அருந்தவபிராட்டி குளத்திற்குக் கொண்டு வரப்படும். ராமாநதி அணை, முரியபஞ்சன் அணை, புதுக்கால்வாய் மற்றும் பாசன வாய்க்கால் ஆகியன தூர்வாரப்பட்டுச் சீர் செய்யப்படும். புளியங்குடியில் குளிர்பதனக் கிடங்கு; எலுமிச்சையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை. சிவகிரி – செண்பகவல்லி அணைத் திட்டம், இரட்டைக்குளம் கால்வாய்த் திட்டம், சேர்வலாறு-ஜம்புநதி நீர்த்தேக்கத் திட்டம். குண்டாறு அணையின் உயரத்தைக் கூட்டி அதிகளவில் நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடையம் – பாப்பாக்குடி – கீழப்பாவூர் 163 கிராமங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். விடுதலைப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் விசுவநாதப்பேரியில் சிலை நிறுவப்படும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடத்திற்குள் நிறைவேற்றும் விதமாக அமைந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு கடந்த பத்து வருடங்களில் 50 வருடம் பின்னோக்கிச் சென்று விட்டது.

அதனால்தான் கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்‘ என்று பத்து வருடத்திற்கு தொலைநோக்குப் பார்வையோடு நாம் ஆற்றவேண்டிய திட்டங்களை அறிவித்திருக்கிறேன். அதை அறிவிக்கும் போது, இது அண்ணா மீது ஆணை – தலைவர் கலைஞர் மீது ஆணை – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக உறுதியாக நிறைவேற்றுவோம் என்றுதான் அறிவித்தேன்.

எனவே அவை எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். இவர்களுக்கு எல்லாம் வாக்கு கேட்கின்ற நேரத்தில் உங்களிடத்தில் எனக்கும் வாக்குக் கேட்கிறேன். ஏன் என்றால் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். நான் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் இவர்கள் வெற்றி பெற வேண்டும். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர்.

இந்தத் தேர்தல் என்பது நாம் பதவிக்கு வரவேண்டும், ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான தேர்தல் மட்டுமல்ல.

மதவெறியைத் தூண்டி, மதக் கலவரத்தை ஏற்படுத்தி, ஜாதிப் பிளவை ஏற்படுத்தி, இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை நுழைத்து, நீட் தேர்வைக் கொண்டுவந்து நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கல்வியைப் படிக்க விடாமல் தடுத்த, மதவெறி பிடித்த அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது தமிழ்நாடு. இது திராவிட மண். இந்த மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் பலிக்காது. நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது, நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

எனவே நம்முடைய தன்மானம் காக்கப்பட, நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க நடக்கின்ற தேர்தல் இது.

இந்தத் தேர்தலில் நீங்கள் அத்தனைபேரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டு, உங்கள் அன்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

அதே போல் இராஜபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

எங்களுக்கு உத்தரவிடுங்கள்… நாங்கள் பணியாற்றக் காத்திருக்கிறோம்… என்று வேண்டுகோள் வைத்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.

அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் – நம்முடைய அன்பிற்கினிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. அவரை உங்களிடத்தில் அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஏற்கனவே அருப்புக்கோட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, தலைவர் கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்து மாவட்டக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று கட்சித் தோழர்களிடத்தில் மட்டுமல்லாமல் மக்களிடத்திலும் செல்வாக்குமிக்க ஒரு செயல் வீரராக விளங்கிக்கொண்டிருப்பவர். எனவே, அருப்புக்கோட்டை தொகுதியில் நிற்கும் அவரை, உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அருமைச் சகோதரர் தங்கம் தென்னரசு அவர்கள், அவரும் அந்தத் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவரும், கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்து தொண்டாற்றி இருப்பவர். அவர் எல்லாத் துறைகளையும் தெரிந்து, அறிந்து புரிந்து எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் அளவிற்கு ஆற்றல் பெற்ற ஒரு சிறந்த அமைச்சராக விளங்கிக் கொண்டிருப்பவர். திருச்சுழி தொகுதியில் இருக்கும் வாக்காளர்கள், அவரை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

அதேபோல விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், அவரும் அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பணியாற்றும் ஆற்றலைப் பெற்றவர். அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நீங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

அதேபோல, இராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சகோதரர் தங்கபாண்டியன் அவர்கள், அவரும் அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி எல்லோருடைய உள்ளங்களிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவராக விளங்கிக் கொண்டிருப்பவர். கொரோனா காலத்தில் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் பணியாற்றிய ஒரு சிறந்த தொண்டர். எனவே அவரை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும். நம்முடைய தங்கபாண்டியன் அவர்கள் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமல்ல, தன்னுடைய சம்பளத்தையே இந்தத் தொகுதி மக்களுக்காக அர்ப்பணித்துப் பணியாற்றிய ஒரு நல்ல தொண்டர். அவரைப்பற்றி நான் இந்தத் தொகுதி மக்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. எனவே அவருக்கு நீங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

அதேபோல, சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ரகுராமன் அவர்கள், அவர் மருத்துவராக மக்களுக்குச் சேவையாற்றுபவராக விளங்குபவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அதேபோல, திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாதவராவ் அவர்கள், அவர் இங்கு வரவில்லை. அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, ஓய்வில் இருக்கின்ற காரணத்தினால் அவர் வரமுடியவில்லை. விரைவில் நலம் பெற்று வருவார். எனவே அவர் நிச்சயமாக திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. அவருக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அதேபோல சிவகாசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சகோதரர் அசோகன் அவர்கள், அவருக்கு கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களை மீண்டும் வலியுறுத்தி வற்புறுத்தி கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

மற்ற தொகுதிகளில் எல்லாம் நம்முடைய வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்பது வழக்கம். இப்போது ஒருவருக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று சொல்வதற்காக இந்தத் தொகுதிக்கு வந்திருக்கிறேன்.

இந்த இராஜபாளையம் தொகுதியில் மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தப்பித்தவறிக் கூட ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப் போட்டு விடாதீர்கள். ஏற்கனவே சிவகாசி மக்களால் விரட்டப்பட்டு இராஜபாளையம் தொகுதிக்கு வந்திருக்கிறார். இந்த இராஜபாளையம் தொகுதி மக்களும் விரட்ட வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு எங்காவது பலூனைப் பார்த்தால் இவர் ஞாபகம்தான் வருகிறது. அவரைப் பார்த்தால் பலூன் ஞாபகம் வருகிறது.

அவர் வாயைத் திறந்தாலே, “வெட்டிடுவேன், குத்திடுவேன், நாக்கை அறுப்பேன், வீட்டின் கதவை உடைப்பேன், சட்டையைக் கிழிப்பேன், தூக்கில் தொங்க விடுவேன், ரப்பர் குண்டால் சுடுவேன், தீவிரவாதியாக மாறுவேன்” என்பதும் – மற்றவர்கள் ஜாதிப் பெயரைச் சொல்லி, மதத்தின் பெயரைச் சொல்லித் திட்டுவதுமாக ஒருவர் அமைச்சராக இருக்கிறார், அவர் ராஜேந்திரபாலாஜி.

இவை அனைத்தும் அமைச்சர் பேசுகின்ற பேச்சா? சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினரே, என் உயிருக்கு ஆபத்து என்று முதலமைச்சரிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தக் கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அது அவருடைய பாணி.

அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் அமைச்சர், தகாத வார்த்தைகளைப் பேசக் கூடாது. எதைச் சொல்லக் கூடாதோ அதைத்தான் இன்றைக்கு ராஜேந்திர பாலாஜி சொல்லிக்கொண்டிருக்கிறார். பேச்சாக இருந்தாலும், பத்திரிகைப் பேட்டியாக இருந்தாலும் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுவதுதான் அவருடைய தொழில்.

ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் மந்திரியாக மட்டுமல்ல, இந்நேரம் அ.தி.மு.க.விலும் இருந்திருக்க முடியாது. ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு, பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் இன்றைக்கு அவர் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். அந்த தைரியத்தில் இன்றைக்கு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரை பழனிசாமி ஏன் இன்னும் வைத்திருக்கிறார் என்றால், இவரால் நமக்கு எதற்கு வம்பு, நம்மைக் கத்தியை வைத்துக் குத்தி விடப்போகிறார், நம்மை அசிங்கமாகப் பேசி விடப்போகிறார் என்று பயந்து பேசாமல் இருக்கிறார்.

ஒன்றுமட்டும் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், அது பா.ஜ.க. வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம். அவ்வாறு சொல்வதற்கு முதல் காரணம், இந்த ராஜேந்திர பாலாஜி தான். ஏனென்றால் அவர் மோடியை, ‘டாடி’ என்று சொன்னார்.

தினமும் மைக்கைப் பார்த்தால் ஏதாவது உளறுவார். இந்த ராஜேந்திர பாலாஜி என்றைக்காவது தன்னுடைய துறையை பற்றிப் பேசியிருக்கிறாரா?

ஆவின் வட்டாரமும், பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அவர் பதில் சொல்லி இருக்கிறாரா?

பால் வாங்குவதில் கமிஷன் பெறும் குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை வாய் திறந்திருக்கிறாரா?

சுமார் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை ஆவின் நிறுவனம் சந்தித்த காரணத்தினால் அது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து இதுவரை அவர் பதில் சொல்லி இருக்கிறாரா?

மதுரை மாவட்ட பால்திட்டப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. அது ஏன் எடுக்கவில்லை என்று நாம் கேள்வி கேட்டிருக்கிறோம். அதற்கு அவர் பதில் சொல்லி இருக்கிறாரா?

மதுரை மாவட்ட மொத்த பால் விற்பனை நிலையத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டும், இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறோம். அதற்குப் பதில் சொல்லி இருக்கிறாரா?

மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலிச் செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இவருடைய பதில் என்ன?

மதுரை பால் பண்ணையில் நடந்த முறைகேட்டிற்குக் காரணமானவர்களைக் காப்பாற்றியது யார்?

இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதில் நடந்துள்ள இமாலயத் தவறுகளுக்கு யார் காரணம்? இதுவரைக்கும் அவர் பதில் சொல்லியிருக்கிறாரா?

ஆவின் பால் பைக்கான பாலித்தீன் ஃபிலிம் கொள்முதல் முறைகேட்டால் பயனடைந்தவர்கள் யார் என்று கேள்வி கேட்டதற்கு, அவர் பதில் சொல்லியிருக்கிறாரா?

தென் மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால்திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றியது யார் என்று கேட்டோம். அதற்குப் பதில் சொல்லி இருக்கிறாரா?

ஆருத்ரா ஊழலில் இன்றைய உண்மை நிலை என்ன? இவ்வாறு எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஏதோ ஐ.நா. சபையில் உட்கார்ந்திருக்கும் அதிகாரி போல, உலகப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் பேசி, ராஜேந்திரபாலாஜி உளறிக் கொண்டிருக்கிறார்.

எனவே இவரை சிவகாசியிலிருந்து மக்கள் எப்படி விரட்டினார்களோ, அதேபோல இராஜபாளையத்திலிருந்து விரட்டப் போகிறீர்களா? இல்லையா? அதுதான் என்னுடைய கேள்வி.

இப்போது இவர் மீது உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவாகி இருக்கிறது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு நீதிமன்றத் தீர்ப்பும் வரப்போகிறது. நீங்களும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தீர்ப்புக் கொடுக்கப் போகிறீர்கள். அதற்குத் தயாராகி விட்டீர்களா?

இப்போது உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்து நாள் கடத்திக் கொண்டிருக்கிறார். எனவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை சட்டரீதியாக விரைவுபடுத்தி உண்மையைக் கண்டுபிடித்து, இந்த ராஜேந்திர பாலாஜியைச் சிறைக்கு அனுப்புவது தான் நம்முடைய முதல் வேலையாக இருக்கப்போகிறது. அதில் எந்த மாற்றமுமில்லை. இதுதான் நடக்கப் போகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்து பேசியிருக்கிறார். பிரதமர் என்பது எப்படிப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு. அப்படிப்பட்ட மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் பிரதமர், ஏற்கனவே ஐந்து வருடம் பிரதமராக இருந்து மீண்டும் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக இருப்பவர். ஒரு மாநிலத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்றால், இந்த ஏழு வருடங்களில் மத்திய அரசின் மூலமாக என்னென்ன திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டும். அதைச் சொன்னால் உள்ளபடியே அவரைப் பாராட்டலாம்.

ஆனால் அவர் வெறும் பொய்யை மட்டும் பேசியிருக்கிறார். தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று சொல்லி இருக்கிறார். நான் மிகவும் அடக்கமாகக் ‘கேட்கிறேன். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… அந்த தாராபுரத்தில் நீங்கள் பேசிய மேடையிலிருந்து 70 கிலோ மீட்டர் தான் பொள்ளாச்சி. அந்தக் கதை உங்களுக்குத் தெரியாதா? அது தெரியாது என்றால் நீங்கள் அங்கு பிரதமராக உட்கார்ந்திருக்க லாயக்கு இல்லை.

அந்தப் பொள்ளாச்சியில் நடந்த கொடுமை, இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. இந்த அ.தி.மு.க. ஆட்சியில் மூன்று வருடங்களாக பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். அந்தப் பெண்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள். நானும் ஒரு பெண் பிள்ளையைப் பெற்றவன்தான். இங்கு இருப்பவர்களில் பலர் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள்தான்.

சுமார் 250க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆளுங்கட்சியின் துணையுடன், அதிகாரிகளின் துணையுடன், காவல்துறையின் ஒத்துழைப்புடன் கடத்திச் சென்று, பண்ணை வீட்டில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் பதிவு செய்து, அதை அவர்களுக்குப் போட்டுக் காட்டி மிரட்டி அச்சுறுத்தி இருக்கிறார்கள். அதை பார்த்து நாம் வேதனைப் பட்டோமே… அதில் உள்ள பெண்கள் அரைகுறை ஆடையோடு, ‘அண்ணா என்னை விட்டு விடுங்கள்’ என்று கெஞ்சி அழுகிற காட்சிகளைப் பார்த்ததோமே…

இந்தக் கொடுமை மூன்று வருடங்கள் நடந்திருக்கிறது. இது அங்கே இருக்கும் காவல் துறைக்குத் தெரியாதா? அவ்வாறு தெரிந்திருந்தும் அமைதியாக இருந்ததற்குக் காரணம், ஆளுங்கட்சியின் தலையீடு, ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய மகன் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.

அது அனைத்தும் சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன், எப்படி ராஜேந்திரபாலாஜி மாட்டப் போகிறாரோ… அதே போல அவரும் மாட்டப் போகிறார். அப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிறது. இது பிரதமருக்குத் தெரியாதா?

இதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைக்கு தி.மு.க.வை – காங்கிரஸை கேவலப்படுத்த வேண்டும் என்று தரம் தாழ்ந்து, பிரதமர் என்பதையும் மறந்து பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையில் பணிபுரியும் ஒரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை. அந்த எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது வேறு யாருமல்ல, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை பொறுப்பிலிருக்கும் ஸ்பெஷல் டி.ஜி.பி. அவர் முதலமைச்சருக்கு மிகமிக வேண்டியவர். எனவே அவர் இந்த இழிவான செயலில் ஒரு பெண் எஸ்.பி.ஐ பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியிருக்கிறார் என்றால், இதைவிடக் கொடுமை என்ன வேண்டும்?

இவை அனைத்தும், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே ! உங்களுக்குத் தெரியாதா? இந்தச் செய்தி உங்களுக்கு வரவில்லையா? இதை எல்லாம் மூடி மறைத்து விட்டு தி.மு.க.வை – காங்கிரசைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வியைத்தான் கேட்கிறேன்.

13 வயதுச் சிறுமியை பா.ஜ.க.வின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்தாரே… இது அனைத்தும் ஆதாரங்களோடு பத்திரிகைகளில் வந்தது. அதே போல தமிழ்நாட்டில் இன்றைக்கு பா.ஜ.க.வில் ரவுடி, கேடி, பிக்பாக்கெட் போன்றவர்கள்தான் சேர்கிறார்கள். அது அனைத்தும் பெயரோடு, ஊரோடு, அவர்கள் தொழிலோடு பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் என்ன மோடி மஸ்தான் வேலைகள் செய்தாலும், அது தமிழ்நாட்டில் பலிக்காது. எப்படிப்பட்ட பிரச்சாரத்தைச் செய்தாலும், அது தமிழ்நாட்டில் பலிக்காது. அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்துவிட்டோம். ஒரு இடமாவது உங்களால் வெற்றி பெற முடிந்ததா?

அதேபோல டான்சி வழக்கில், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறு தண்டனை கொடுக்கப்பட்ட போது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். எனவே ஜெயலலிதா அவர்களுடைய பதவி பறிக்கப் படுகிறது.

அந்தக் கோபத்தில் ஆத்திரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தருமபுரியில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் சென்ற பேருந்தை கொளுத்தினார்கள்.

அவர்களுக்கு கொஞ்சமாவது ஈவிரக்கம் இருந்திருந்தால், அந்த மாணவிகளை இறக்கி விட்டாவது, அந்தப் பேருந்தைக் கொளுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த மாணவிகளை உள்ளேயே வைத்து உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள். அதில் மூன்று மாணவிகள் இறந்தார்கள். இதைவிடக் கொடுமை நடக்க முடியுமா?

இது அனைத்தும் மோடிக்கு தெரியாதா? இதைத் தெரிந்து கொள்ள முடியாத நீங்கள் பிரதமராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?

எனவே நிச்சயமாகச் சொல்கிறேன், எப்படி எம்.பி. தேர்தலில் பூஜ்யமாகச் சென்றீர்களோ, அதேபோல எம்.எல்.ஏ. தேர்தலிலும் பூஜ்யமாகத்தான் இருப்பீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன திட்டங்களை, என்னென்ன சாதனைகளைச் செய்யப் போகிறோம் என்பதைத் தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.

அதில் குறிப்பாக தொழில் வளர்ச்சிக்காக, கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும், டிட்கோ – சிட்கோ போன்ற முன்னோடி அமைப்புகள் உருவாக்கப்பட்டது போல, வங்கிகள் – நிதி நிறுவனங்களோடு இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியினை ஏற்பாடு செய்ய சிறப்பு நிறுவனங்கள். தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசுத் துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தொழிலாளர்கள் நல வாரியங்கள் முழு வீச்சில் செயல்படும், பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் – டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த 7 தொகுதிகளுக்காக, விருதுநகரில் லாரிகள் நிறுத்துவதற்காக லாரிகள் முனையம்; அரசு சட்டக் கல்லூரி; திருவில்லிபுத்தூரில் அழகர் அணை திட்டம்; அரசு பாலிடெக்னிக் கல்லூரி; புதிய பேருந்து நிலையம்; தொழிற்பேட்டை. சாத்தூர் அருகில் பட்டம்புதூரில் ஏற்கனவே கழக ஆட்சியால் அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். சிவகாசியில் பட்டாசுத் தொழிற்பூங்கா; சுற்றுவட்டச் சாலை. காரியாபட்டியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் துணை நீதிமன்றமும், பேருந்து பணிமனையும் அமைக்கப்படும். திருச்சுழி – நரிக்குடியில் அரசு கலை – அறிவியல் கல்லூரி. திருச்சுழி பகுதியில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். இராஜபாளையம், திருச்சுழியில் குளிர்பதனக் கிடங்குகள். அருப்புக்கோட்டையில் சாயத் தொழிற்சாலை மற்றும் ஜவுளி வளாகம் அமைக்கப்படும். மானூர் குடிநீர்த் திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் மேலும் பல ஊர்களுக்கு விரிவுபடுத்தப்படும். தீப்பெட்டித் தொழிலுக்குள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்போது ஆட்சிக்கு வந்து ஐந்து வருடத்தில் நாம் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளில் சிலவற்றை உங்களுக்குச் சொன்னேன்.

ஆனால் நாம் கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியில் 50 வருடம் பின்னோக்கிச் சென்று விட்டோம். எனவே தான் திருச்சியில் கடந்த 7ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் ஏழு அறிவிப்புகளை வெளியிட்டேன். அதில் தொலைநோக்குப் பார்வையோடு 10 ஆண்டு காலத்தில் நாம் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றப் போகிறோம் என்பதைப் பற்றி அறிவித்தேன்.

அவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் எல்லாம் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

நான் அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். எனவே இந்த வேட்பாளர்களுக்கு நீங்கள் வெற்றியை தேடித்தந்தால்தான் நான் முதலமைச்சர்.

இந்தத் தேர்தலில் நாங்கள் பதவிக்கு வர வேண்டும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மட்டும் நடக்கின்ற தேர்தல் அல்ல.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டி, மதக் கலவரத்தை ஏற்படுத்தி, நம்முடைய தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியை நுழைத்து, சமஸ்கிருதத்தை நுழைத்து, தமிழகத்தில் இருக்கும் நம்முடைய மாணவச் செல்வங்கள் மருத்துவர்களாக வரக்கூடாது என்பதற்காக நீட் தேர்வைத் திணித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு கொடுமையை இன்றைக்கு மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் பழனிசாமி தலையில் இருக்கும் ஆட்சி துணையாக இருந்து வருகிறது.

எனவே நான் அவர்களுக்குச் சொல்வது, இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண் – அறிஞர் அண்ணா பிறந்த மண் – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் பலிக்காது.

எனவே இழந்திருக்கும் உரிமையை மீட்க, நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்ற, நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்ற, நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்க நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள் என்று அன்போடு கேட்டு, அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.


Share

Related posts

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Admin

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் டிசம்பர் 23ம் தேதி துவக்கம்

Admin

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

Leave a Comment