கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Share

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்டக் கழக அலுவலகமான உதகை – கலைஞர் அறிவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

அதன் விவரம் பின்வருமாறு: நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அலுவலகமான ‘கலைஞர் அறிவாலயத்தில்’, பேரறிஞர் அண்ணா அவர்களது சிலைக்கு அருகில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது சிலையைத் திறந்து வைப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன்.

அங்கே வந்து திறந்து வைக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கிறதே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்; கலைஞர் அவர்களது சிலையைத் திறந்து வைப்பது எனக்குக் கிடைத்த மாபெரும் பெருமையாக உள்ளது!

வங்கக் கடலோரம் பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரத்து 374 அடி உயரமுள்ள உதகையில் சிலை அமைக்கப்படுகிறது.

கடற்கரையில் துயில் கொண்டிருப்பவருக்கு; மலையரசியின் மடியில் சிலை அமைக்கப்படுகிறது.

இது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல; நமக்கெல்லாம் சேர்த்து கிடைத்த பெருமை!

அவர் திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்தவராக இருந்தாலும்; இந்த தாய்த்திருநாட்டின் குழந்தை அவர்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என வாழ்ந்தவர் அவர்.

சொந்த ஊரைத் தாண்டி- மாவட்டம் தாண்டி- மாநிலம் தாண்டி- நாடு தாண்டி- உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அவரது சிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வைக்கப்பட்டு வருகின்றன. இன்று நீலகிரி மாவட்டத்தில் திறந்து வைக்கிறேன்.

1988-ம் ஆண்டு நிதியளிப்புக் கூட்டத்திற்காக ஊட்டி வந்திருந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அன்று மாலை 3 மணிக்கு கூட்டம் நடக்க வேண்டும். தலைவர் அவர்கள் மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென மேடை சரிந்துவிட்டதாக தலைவருக்குத் தகவல் கிடைத்தது.

“தற்காலிகமாக ஒரு மேடையை அமையுங்கள், நான் அதில் பேசுகிறேன்” என்று அன்றைய மாவட்டச் செயலாளர் முபாரக்கிடம் தலைவர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் உடனடியாக மேடை போட முடியவில்லை. அப்போதும் தலைவர் விடவில்லை. “திண்ணை போன்ற இடத்தை ஏற்பாடு செய்; நான் பேசுகிறேன்” எனச் சொன்னார்கள். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் பல்லாயிரம் பேருக்கு மத்தியில் உரையாற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். இது நீலகிரி மக்கள் மீது கலைஞர் கொண்டிருந்த பிரியத்திற்குச் சான்று!

அவர் திண்ணையில் நின்று பேசிய மாவட்டத்தில்தான் சிலையாக இன்று திறந்து வைக்கப்படுகிறார்.

உதகையைப் பிடிக்காது என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த இடங்களில் ஒன்று உதகை!

தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முறை முதல்வராக ஆனபோது எல்லாத் துறைகளையும் வளர்த்தெடுத்தார். அதில் சுற்றுலாத் துறையும் ஒன்று. சுற்றுலா தலமாக இருக்கக்கூடிய உதகை மீது சிறப்புக் கவனம் செலுத்தினார்.

உதகை ஏரியைத் தூர் வாரி, மின் விளக்குகள் அமைத்து, பூங்காக்கள் அமைக்க – முதல்வர் கலைஞர் அவர்கள் 1970-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தார். அதில் இருந்துதான் உதகை ஏரி புத்துயிர் பெற்றது.

அதேபோல் உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். முதுமலை சரணாலயத்தை விரிவு படுத்துவதற்காக மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை கொடுத்ததும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான்.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் தனியார் வசமிருந்த பேருந்துச் சேவையை முதன்முறையாக அரசுடைமை ஆக்கியது; நீலகிரி மாவட்டத்தில் தான்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது – ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினர். அப்போது, அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நினைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள்! இலங்கையில் இருந்து திரும்புபவர்கள் தேயிலைத் தோட்டத் தொழில் தெரிந்தவர்கள் என்பதால்,

1970-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள – கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் அவர்களைக் குடியமர்த்தினார். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தை தோற்றுவித்தார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 43,111 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைச் சாகுபடி செய்யும் பணியை அவர்களுக்கு வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் ஒரு கட்டடம் கட்டித் தர வேண்டும் என நினைத்த தலைவர் கலைஞர் அவர்கள், முதல்முறை முதல்வராக இருந்த போது, உதகையில் இளம் படுகர் நலச்சங்கம் கட்டடத்தை இலவசமாக கட்டித் தந்த பெருமை தலைவர் கலைஞருக்கு உண்டு.

நூறாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நீலகிரியில் தொடர்வதற்கு காரணமாக இருந்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் தான். 1970-ம் ஆண்டு ஊட்டி மலை ரயில் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, அதை முற்றாக நிறுத்திவிட அன்றைய மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர், அந்த நஷ்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும், ரயில் சேவையை நிறுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். அதனால்தான், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மலை ரயில் சேவை இன்று வரை நீடிக்கிறது.

கடந்த 2005-ம் ஆண்டு, யுனஸ்கோ அமைப்பு, ஊட்டி மலை ரயில் சேவையை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது என்றால்; அந்தப் பெருமையும் அவருக்கே உரியது.

நீலகிரியில் பிரதான தொழில் தேயிலை உற்பத்திதான். அந்தத் தொழிலாளர்களுக்கும் தலைவர் கலைஞருக்கும் எப்போதுமே இனம்புரியாத நேசம் இருந்து கொண்டே இருக்கும். 2008-ம் ஆண்டில் தேயிலை தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அரசு தரப்பு என முத்தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிமையாளர்கள் நாட்கூலியாக 88 ரூபாய் தான் தரமுடியும் என்றனர். ஆனால் தொழிலாளர்கள் 90 ரூபாய் கேட்டனர். அரசு 89 ரூபாய் நிர்ணையித்திருந்தது. பேச்சுவார்த்தைக் குழுவினர் மூலம் இது அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் கவனத்திற்கு வரவே – அவர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 102 ரூபாய் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மீது கலைஞர் கொண்டிருந்த பாசத்திற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டாக இருக்கும்.

ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் சமூகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதனை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர்.

இன்றைக்கு படுகர் சமூகத்தில் இருந்து முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி உருவாகி இருக்கிறார் என்றால், அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சீர்திருத்தமும் ஒரு காரணம். யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மல்லிகா என்ற பெண்ணை நானே தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன். தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்த இடஒதுக்கீடும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதியும் தான் தனது வளர்ச்சிக்கு காரணம் என்று அந்தப் பெண் சொன்னார்.

மறைந்தும் மறையாமல் இருந்து இப்படி எத்தனையோ பேரை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.

இப்படி இந்த மாவட்டத்துக்கு முதல்வர் கலைஞர் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

1993-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் அந்த மாவட்டத்திற்கும் தலைவருக்கும் இருக்கும் தொடர்பை எடுத்துரைத்து வழிமொழிந்து வந்தனர். அப்போது நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக், “நான் இயற்கை வளம் கொஞ்சும் நீலகிரியில் இருந்து வந்துள்ளேன். தலைவர் கலைஞர் அவர்கள் இயற்கையிலேயே தலைவர் என்பதால், இயற்கை வளம் கொழிக்கும் எனது மாவட்டம் சார்பில் வழிமொழிகிறேன்’’ என்றார்.

இதற்கு தலைவர் கலைஞர் பதிலளித்து முரசொலியில் கடிதம் எழுதி இருந்தார்.

“நான் இயற்கையிலேயே தலைவன் அல்ல; தலைவனாக பிறந்தவனும் அல்ல; அன்றும் இன்றும் என்றும் தொண்டன் தான்; உன் போன்ற உடன்பிறப்புகள் என்னை தலைவனாக்கி, தொண்டு செய்துள்ள ஆணையிட்டுள்ளீர்கள். அது தான் உண்மை! உண்மை!!” என்று பதிலளித்திருந்தார்.

அத்தகைய தலைமைத் தொண்டராக இருந்து கழகத்தை வளர்த்தவர் கலைஞர் அவர்கள்! தலைவராக இருந்து மாநிலத்தை வளர்த்தவர்! முதல்வராக இருந்து தமிழகத்தை வளர்த்தார்!

தாயுள்ளத்தோடு தமிழகத்தை ஆட்சி செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்!

ஒரு முதல்வர், தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும் என்று அவர் ஒருமுறை சொன்னார். “அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். ஆனால் அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு தாய்க்கும் உண்டு; இந்த அரசுக்கும் உண்டு. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையையும் தட்டி எழுப்பி பால் தருவாள். அந்தளவுக்கு பரிவு மிக்க தாய் தான் இந்த அரசாங்கம்” – என்று தனது ஆட்சிக்கான இலக்கணத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்னார்.

அப்படித்தான் அவர் ஆட்சி செலுத்தினார். அதனால் தான் அவரை இந்த உலகம் இன்னும் வாழ்த்திக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இன்றைக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. அழுத பிள்ளையை பற்றியும் கவலைப்படுவது இல்லை; அழாத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படவில்லை. பசியைப் போக்கும் உணவு தராமல் பட்டினி போட்டு எல்லாப் பிள்ளைகளையும் கதறி அழவைக்கும் அரசாக இது இருக்கிறது. பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் ஆட்சியாக இருக்கிறது. பிள்ளைகளை மட்டுமல்ல; தாய் தந்தையரையும் சித்ரவதை செய்யும் அரசாக இருக்கிறது. மொத்தத்தில் இது கொரோனாவை விட கொடூர அரசாக இருக்கிறது. இரக்கமே இல்லாத அரசாக இருக்கிறது.

நீலகிரியில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதும் – அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் – நான் உடனே வந்து பார்வையிட்டேன்; ஆறுதல் சொன்னேன். தி.மு.க. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினோம்.

ஆனால் முதலமைச்சர் வரவில்லை!

மக்களைச் சென்று சந்திப்பது தன்னுடைய பணியல்ல என்று நினைக்கிறார் முதலமைச்சர். அவர் முதலமைச்சர் ஆவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை; அதனால் அவரும் மக்களை மதிப்பது இல்லை!

இருக்கும் கொஞ்ச காலத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட நினைக்கும் ஒரு கூட்டத்திடம் கோட்டை சிக்கிக் கொண்டுள்ளது. இவர்களிடம் இருந்து கோட்டையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை நமக்கு இருக்கிறது.

“கொடியவர்களிடம் இருந்து கோட்டையை மீட்போம்;

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை மீட்போம்!”

  • என்ற உறுதிமொழியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிலை முன் எடுப்போம்.

மலையில் உள்ள தலைவர் கலைஞர் சிலையின் முன் சபதம் எடுத்து – கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞர் நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பிப்போம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.


Share

Related posts

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Admin

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Udhaya Baskar

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

Leave a Comment