சமுதாய மேம்பாட்டிற்கான இலக்குகளை செயல்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

Share

தமிழ்நாட்டில் அனைத்து 364 சமுதாய மேம்பாட்டிற்கான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சமுதாயமும் உரிய முன்னேற்றம் அடைய வேண்டும்; அப்போது தான் வளமான, வலிமையான, அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா வலியுறுத்தியிருக்கிறார். அதற்காக தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டிற்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (31.12.2020) இணையவழியில் நடைபெற்றது. அப்போது அரசியல் தீர்மானமும், பொதுத்தீர்மானங்களும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சிறப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வர தம்மை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பொதுக்குழு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானத்தை மருத்துவர் அய்யா அவர்களே கொண்டு வந்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:

ஒவ்வொரு சமுதாயமும் உரிய முன்னேற்றம் அடைந்தால் தான் தமிழ்நாடு முன்னேற்றமடைய முடியும். எனவே, ஒவ்வொரு சமுதாயத்திற்குமான மேம்பாட்டு இலக்குகளை (Agenda for Development) உருவாக்க வேண்டும். ஐநா நீடித்த மேம்பாட்டு இலக்குகளுக்கு (Sustainable Development Goals – SDGs) ஏற்ப கல்வி, வேலை, தொழில், உடல்நலம் என ஒவ்வொன்றிலும் -தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமுதாயமும் மேம்பட்ட நிலையை அடைவதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை எட்டுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா என்பது நாடும் அதன் மக்களும் ஆகும். நாடு என்பது அதன் எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கான வரையறை என்ன என்பதை அளவிட, இந்திய அரசின் மானுடவியல் அமைப்பு (Anthropological Survey of India – ASI) ஒரு மாபெரும் ஆய்வினை 1985 ஆம் ஆண்டில் தொடங்கி 15 ஆண்டுகள் நடத்தியது. இந்திய மக்கள் திட்டம் (People of India Project) என்ற அந்த ஆய்வின் முடிவில் 4,694 சமுதாயங்கள் தான் ‘‘இந்தியா’’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் மொத்தம் 40,000 பக்கங்கள் அடங்கிய 43 தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வின் படி, தமிழ்நாட்டினை 7 சூழல்- பண்பாட்டு மண்டலங்களாக (Eco-cultural zones) பிரித்து, அவற்றில் மொத்தம் 364 சமுதாயங்கள் (Communities) வாழ்வதாக அடையாளம் காணப்பட்டது. இந்திய அளவில், ஒருங்கிணைந்த தெலுங்கானா – ஆந்திர பிரதேசத்துக்கு அடுத்ததாக மிக அதிக எண்ணிக்கையில் சமுதாயங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய மானுடவியல் அமைப்பின் இந்திய மக்கள் திட்டம் ஆய்வு, ‘தேன்கூடு மாதிரி’ (Honey – Comb Model) எனும் கோட்பாட்டை முன் வைக்கிறது. தேன்கூட்டில் ஒவ்வொரு அறையும் தனியாக இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் ஒற்றுமையாக இருக்கின்றன. அனைத்து அறைகளும் சேர்ந்து ஒரு முழுமையான தேன்கூட்டை உருவாக்குகின்றன. அதேபோன்று சமுதாயங்கள் இணைந்து ஒரு நாட்டை உருவாக்குகின்றன.

தமிழ்நாடு என்பது அதன் எல்லையை குறிக்கும். தமிழ்நாட்டு மக்கள் என்பது அதன் 364 சமுதாயங்களை குறிக்கும். இதுதான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் உண்மையான மேம்பாடும் அமைதியும் – இந்த சமுதாயங்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைவதிலும், அவற்றுக்கான உரிமைகளை பெறுவதிலும், அவற்றின் பண்பாட்டை காப்பதிலும், அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதிலும் தான் இருக்கிறது.

ஒவ்வொரு சமுதாயமும் வளர வேண்டும். எல்லா சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இதுவே வளமான, வலிமையான, அமைதியான தமிழ்நாட்டை உருவாக்கும். எனவே, ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு சமுதாயத்துக்குமான வரைவு மேம்பாட்டு இலக்குகளை அந்தந்த சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து உருவாக்குவது என்றும், அதை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த சில வாரங்களில் வெளியிடுவது என்றும் இந்த சிறப்பு பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானத்தை மருத்துவர் அய்யா அவர்கள் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Share

Related posts

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

விரைவில் கொரோனா தடுப்பு மருந்து – சுகாதார துறை செயலர்

Admin

திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

Admin

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

திரையரங்குள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

Admin

வித்தியாசமான வேடத்தில் வலம் வந்து நன்றி தெரிவித்த மருத்துவர்

Admin

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

Admin

Leave a Comment