கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Ramadass_pmk
Share

கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கிரீமிலேயர் ஊதிய வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதாக கடந்த இரு ஆண்டுகளாக கூறி வரும் மத்திய அரசு, இன்னும் இறுதி முடிவு எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அந்த உரிமை அவ்வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப் படுவதில்லை. 27% இட ஒதுக்கீட்டு வழக்கில் 16.11.1992 அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் எனப்படும் வசதி படைத்தவர்களை அடையாளம் கண்டு விலக்கி, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயம், சம்பளம் தவிர பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.8 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்களாக கருதப்படுகின்றனர். இந்த வருமான வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும்.

நடைமுறை எதார்த்தத்திற்கு பொருந்தும் வகையில் இந்த வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயர் வருமானவரம்பு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அப்போதும் அது போதுமானதல்ல என்றும், கிரீமிலேயர் வருமான வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது.

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பிறகும் கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்த கோரிக்கை பரிசீலனையில் தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவது நியாயமல்ல. இது குறித்த முடிவை எடுப்பது ஒன்றும் சிக்கலானது அல்ல. கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது பற்றி முடிவெடுக்க வழிகாட்டி விதிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் வருமான வரம்பை உயர்த்துவது குறித்த முடிவை மிகவும் எளிதாக எடுக்க முடியும். ஆனாலும், அந்த முடிவை எடுப்பதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்படுவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பாதிக்கும்.

உலக அளவில் பணவீக்கம் வேகமாக உயரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் வேகத்தைக் கணக்கில் கொண்டு தான் கிரீமிலேயர் வருமான வரம்பு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. கடைசியாக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அடுத்த உயர்வு அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் ஓராண்டு நிறைவடையப் போகும் நிலையில், இன்று வரை கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படாததை மத்திய அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அத்துடன் பி.பி சர்மா குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் சேர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதைக் கண்டித்தும், விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கிரீமிலேயரை தீர்மானிப்பதற்கான கணக்கில் சேர்க்கக்கூடாது என்றும் நான் தான் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டேன். அதன் பிறகு இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததை வைத்துப் பார்க்கும் போது, கிரீமிலேயரை தீர்மானிப்பதற்கான வருமானத்தில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாயையும் சேர்ப்பதற்காகத் தான் மத்திய அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற தத்துவம் இந்திய அரசியல் நிர்ணய அவையால் படைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திலோ, அதன்பின் அதில் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட திருத்தங்களிலோ இடம் பெறவில்லை. மாறாக, சமூகநீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் சில நீதிபதிகளால் திணிக்கப்பட்டது தான் இந்தத் தத்துவம் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்தத் தத்துவம் இன்னும் நீடிக்கிறது. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியுடைய பலர் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரீமிலேயர் நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. அதற்கு முன்பாக கிரீமிலேயர் வருமான வரம்பு உடனே உயர்த்தப்படாவிட்டால் இப்போது இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பலரும் அந்த உரிமையை இழப்பார்கள்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளது. அதற்குள்ளாக கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை என்றால் தகுதியுள்ள பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியாத நிலை ஏற்படும். அதைத் தவிர்க்கும் வகையில் கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, கிரீமிலேயர் வருமான வரம்பை கணக்கிடுவதில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாய் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.


Share

Related posts

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Admin

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜக துணைத் தலைவர் பதவி!

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Admin

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான்: முதலமைச்சர்

Admin

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

Leave a Comment