கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Share

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப்படாததால், அவர்களின் குடும்பங்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாயுள்ளதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் தனது அறிக்கையில் ;

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப்படாததால், அவர்களின் குடும்பங்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகளை பெற்றுத் தருவதற்கான ஆவணத்தை தயாரிப்பதில் காட்டப்படும் அலட்சியம் அல்லது தவறு கண்டிக்கத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்குதலின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் நேற்று வரை 25,665 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றாலும் கூட இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஆகும். இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால், அவ்வாறு உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் பலர் நிமோனியா, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறு.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நேரங்களில் நிமோனியா, சிறுநீரகப் பாதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது உண்டு. ஆனால், அவர்களின் இறப்புக்கு அந்த நோய்கள் காரணமல்ல. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் பின்விளைவாகத் தான் அவர்களுக்கு பிற நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அதனால் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாகத் தான் கருதப்பட வேண்டும். மாறாக பிற நோய்களால் அவர்கள் உயிரிழந்து விட்டதாக சான்றளிப்பதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கின்றன. சில இடங்களில் தாய், தந்தை என இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி விட்டனர். அவர்களின் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று தமிழக அரசும், அந்தக் குழந்தைகளின் 23-ஆவது வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பீடு செய்யப்படும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளன. இவை தவிர மாத நிதியுதவி, கல்வி உதவி உள்ளிட்ட மேலும் பல உதவிகளும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்தகைய உதவிகளை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பெற வேண்டுமானால், அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் தான் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பத்தினரால் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டை பெற முடியாது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் பல குடும்பங்கள் குடும்பத் தலைவரை இழந்துள்ளன. சில குடும்பங்கள் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி ஆகிய இருவரையும் இழந்துள்ளன. வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் இல்லாமல் ஒரு குடும்பம் இயங்குவது எவ்வளவு சிரமம்? என்பதை அனைவரும் அறிவார்கள். அத்தகைய குடும்பங்கள் குறைந்தபட்ச தேவைகளுடன் இயங்குவதற்கு அரசின் உதவி தேவை. அதை உணர்ந்து தான் மத்திய, மாநில அரசுகள் சில உதவிகளை அறிவித்துள்ளன. அந்த உதவிகள் போதுமானவை இல்லை என்றாலும் கூட, தேவைகளை ஓரளவு நிறைவேற்றுவதற்கு துணை நிற்கக்கூடியவையாகும். ஆனால், அதைக் கூட பெற முடியாத அளவுக்கு இறப்புச் சான்றிதழில் தவறான காரணங்களை குறிப்பிடுவது மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் சீர்குலைப்பதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் இறப்புக்காக குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை திருத்தி, கொரோனாவால் உயிரிழந்ததாக புதிய இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் டிசம்பர் 23ம் தேதி துவக்கம்

Admin

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

Leave a Comment