உயிருக்கு உலை வைக்கும் குரோமியம் கழிவுகள் – போராட்டம் நடத்தப்போவதாக இராமதாசு எச்சரிக்கை

Share

ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் ஆலைகளில் இருந்து குரோமிய கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் அவற்று எதிராக தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குரோமியம் கழிவுகள் அப்பகுதியில் உயிர்க்கொல்லி நோயை பரப்பும் ஆதாரங்களாக மாறி வருகின்றன. மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள், மக்களின் உயிரைப் பறிக்கும் எமனாக மாறி வருவதும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் கண்டிக்கத்தக்கவை.

இராணிப்பேட்டை பகுதியில் நிலத்திலும், நிலத்தடி நீரிலும் குரோமியம், ஈயம் உள்ளிட்ட உலோகங்கள் கலந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குரோமியம், ஈயம் உள்ளிட்ட கழிவுகள் முதலில் மண்ணிலும், பின்னர் நிலத்தடி நீரிலும் கலப்பதால் அதை பயன்படுத்தும் மக்களுக்கு மிகவும் ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குரோமியம், ஈயம் கலந்த நீரை வாய்வழியாக பருகுவதாலும், குளிப்பது, முகம் கழுவது போன்றவற்றுக்கு பயன்படுத்துவதாலும் புற்றுநோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இதயநோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் முடிவும், ஆட்சியாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அம்சமும் என்றவென்றால் இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமியம் கழிவுகளை வெளியிடும் புதிய ஆதாரங்கள் உருவாகியுள்ளன என்பது தான். இந்த உண்மையை அலட்சியப்படுத்தி விட்டு, இருந்து விட முடியாது. இராணிப்பேட்டை பகுதியில் குரோமிய பாதிப்பு என்பது புதிதல்ல. இராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்பட்ட ஆலையில் 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அது அகற்றப்படாததால், அது தான் வேதிவினை புரிந்து நீரிலும், நிலத்திலும் கலந்து வருவதாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நடத்தப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையிலிருந்து மட்டுமின்றி, வேறு பல ஆலைகளில் இருந்தும் அதிக அளவில் குரோமியக் கழிவுகள் வெளியாவது தெரியவந்துள்ளது.

குரோமியக் கழிவுகளின் வெளியேற்றம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாமல், இதே நிலை தொடர அனுமதிக்கப்பட்டால் இராணிப்பேட்டை பகுதியில் சுகாதாரப் பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையில் அகற்றப்படாமல் வைத்திருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தில் பரவியதால் மட்டும், அப்பகுதியில் 600 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறி விட்டன. குரோமியக் கழிவுகளின் வெளியேற்றம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் சரி செய்யமுடியாத பாதிப்புகள் ஏற்படும்.

உலக அளவில் நீரும், நிலமும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக இராணிப்பேட்டையும் உள்ளது என்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளில் எனது தலைமையிலும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரை பயணங்கள், போராட்டங்கள் என எண்ணற்ற இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் எந்த பயனும் ஏற்படவில்லை.

சுற்றுச்சூழல் சீரழிவிலிருந்து மக்களைக் காப்பது தான் ஆட்சியாளர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். அதன்படி இராணிப்பேட்டை பகுதி மக்களை குரோமியக் கழிவுகளால் ஏற்படும் கொடிய நோய் பாதிப்புகளில் இருந்தும், விளைநிலங்களை மலட்டுத் தன்மையிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையில் வைக்கப்பட்டிருக்கும் 2.50 லட்சம் குரோமியக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்; எந்தெந்த ஆலைகளில் இருந்து குரோமியக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றனவோ, அந்த ஆலைகளுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்குப் பிறகும் ஏதேனும் ஆலைகளில் இருந்து குரோமிய கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் அவற்றை நிரந்தரமாக மூட ஆணையிட வேண்டும்.அவ்வாறு செய்யத் தவறினால், கொரோனா ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் இராணிப்பேட்டையில் நானே தலைமையேற்று மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நடத்துவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Share

Related posts

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

கருப்புப் பூஞ்சை மருந்து தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

Udhaya Baskar

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

test news

Admin

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

Leave a Comment