
பெய்ஜிங்: இதுநாள் வரை பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தி வந்த H3N8 எனப்படும் பறவைக் காய்ச்சல் தற்போது மனிதனுக்கும் பரவியிருப்பது உலக நாடுகளின் மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனாவின் ஹினான் மாகாணத்தில் எச்3என்8 பறவைக் காய்ச்சல் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அவ்வப்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2002 ஆம் ஆண்டில், H3N8 பறவைக் காய்ச்சல் வட அமெரிக்காவில் உள்ள நீர்ப்பறவைகளில் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பறவைகள், குதிரைகள், நாய்கள் மற்றும் சீல்களை பாதிக்கும் என்று அறியப்பட்டாலும், அது மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதுநாள் வரை கண்டறியப்படாமல் இருந்து. இந்நிலையில் இந்நிலையில், சீனா நாட்டின் ஹினான் மாகாணத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு எச்3என்8 பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் மக்களை கவலை அடைய செய்துள்ளது.
ஏப்ரல் 5 ஆம் தேதி சீனாவின் தேசிய சுகாதார கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு H3N8 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மூலம் சிறுவனுக்கு கிருமி பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிறுவனின் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை பறவைகள் மற்றும் விலங்கினங்களில் மட்டுமே காணப்பட்ட H3N8 காய்ச்சல், சீனாவில் மனிதர்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது, இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.